நூறு முறையில் விசாரித்தாலும் ,

நொடி தவறா இயேசுவை,

ஆறு தவணை விசாரித்தார்கள்,

அந்த இரவு நேரத்தில்.

கூறு கெட்ட மதியீனரால்,

கொணரப்பட்ட பழிகளை,

தாறு மாறாக்குகின்றார்;

தம் மௌன சாரத்தில்!

(லூக்கா 22 & 23)

குற்றம் அற்றவர் என்றறிந்தாலும்,

கொல்லத் துடிக்குது ஒரு கூட்டம்.

முற்றம் வந்து முழக்கம் போட்டு,

முடிவு கட்டிட வெறி ஊட்டும்.

கற்றவரோயெனில் காண மறுக்கிறார்.

கவலை அவர்க்கு பரி வட்டம்.

பெற்ற தண்டனை சிலுவைச் சாவு;

பின்னர் புரியும் இறை திட்டம்!

(லூக்கா 23)

தள்ளப்பட்டுத் தண்டனை அடையும் 

தவறு இழையா அவர் தலையில்,

முள்ளின் முடியை வைத்தும் அடித்தார்,

முரட்டுப் படை வீரர் அன்று.

வெள்ளம் பாய்ச்ச, ஆழத் திறக்கும், 

வீறு கொள்கிற ஏரைப் போல், 

கள்ளம் நினையார் முதுகும் கிழித்தார், 

கசையடி முப்பத்தொன்பதென்று!

(மத்தேயு 27:27-31)

பிழையொன்றுமில்லார் என்று அறிந்தும்,

பிலாத்து கொல்லக் கொடுக்கின்றார். 

மழையென்று வந்த நேர்மை தெரிந்தும், 

மறுத்து, குவளையில் கேட்கின்றார். 

கழுவிடும் நீர்தனில் கறைகள் கரையும்; 

கருத்தால் முழுக்குமே எடுக்கின்றார்.

எழுதிடும் தீர்ப்புகள், இறையின் விருப்பா?

எண்ணார், தம்மைக் கெடுக்கின்றார்!

(மத்தேயு 27:1-26)