திருமறை சொல்லா இன்னொரு பிரிவு,

தேடிப் பார்க்க வரலாறுரைக்கும்.

பெருமைகள் துறந்து நோன்புமிருந்து,

பெயரில்  எசேனி என்றுமிருக்கும்.

மறுமுறை உயிர்ப்பு நம்பாப் பிரிவு,

மறைந்து ஒடுங்கி தனை மறக்கும்.

ஒருமுறை இறக்க, இருமுறை பிறப்பு;

இறைமகன் சொல்லே சிறக்கும்!

வெறித்தனம் கொண்டது இன்னொரு கூட்டம்;

வீணாய்ப் போனது செலோத்தே கூட்டம்.

பறித்திடும் உரிமை மீட்பதற்கென்று,

பட்டயம் எடுத்து வீழ்ந்த கூட்டம். 

நரித்தனம் கொண்டு ஆடிடும் ஆட்டம், 

நல் முடிவடைய சொல் ஓர் ஆட்டம்?

விரித்திடும் தீமை அழிப்பதற்கென்று, 

விண் அளிக்கும் அன்பின் ஆட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தாலும்,

நம்ப மறுக்கும் ஒரு கூட்டம்.

இல்லை உயிர்ப்பு, தூதர் என்று,

எதிர்க்கும் இந்த சிறு கூட்டம்.

வல்ல எதிரி உற்றிருந்தாலும்,

வாழ்த்தி நிற்கும் இக்கூட்டம்.

சல்லடையாக வடித்திழக்கும்,

சதுசேயரே அக்கூட்டம்!

பற்று வேறு வெறித்தனம் வேறு;

பகுத்தறிந்து விடு தவறு.

உற்று உணரா பரிசேயர் பாரு;

ஊர் பிரித்தனர் பல கூறு.

சற்று நமையும் ஆய்தல் பேறு;

சரி செய்வோம் அழுக்காறு.

கற்று அறியப் பணிவோர் யாரு?

கடவுள் கேட்கிறார் இவ்வாறு!

பலவித தோற்றங்கள் கொடுப்பினும்,

பகிர்ந்திட படங்கள் எடுப்பினும்,

விலையறு புழுவாய் இருக்கிறேன்.

வீண் புகழ்ச்சியை வெறுக்கிறேன்.

இலை மறை காய் எனும் நல்லிறை

எனக்கு அருளிடும் சொல்லுரை,

மலைதனை பெயர்ப்பது, காணுவேன்;

மடியா அன்பினால் பேணுவேன்!

-கெர்சோம் செல்லையா

www.thetruthintamil.com

இந்த நாளில் பல்வகைக் கருத்தால்,

இயங்கும் பற்பலக் கூட்டம் போல்,

அந்த நாளிலும் யூத இனத்தினர்,

அவரைப் பிரித்து நடந்தனர்.

சொந்த இனத்தின் விடுதலை நாடி

சொல் செயலாலே வெறியூட்டி,

எந்த மீட்பும் எதிலும் பெறாமல்,

இயாலாமையிலே கிடந்தனர்!

சொல்லும் சொல்லில் ஆளுமை கண்டோர்,

சொக்கி நின்றதை நாம் கண்டோம்.

இல்லாரிடத்திலும், இருப்பார் இல்லிலும்,

இயேசு செல்வதும் நாம் கண்டோம்.

பொல்லா நோய்களும், புரியா வலிகளும்,

புறப்பட்டோடுதல் நாம் கண்டோம்.

எல்லோர் நோக்கும் இறையை நோக்கும்,

இருப்பிடம் இயேசுயெனக் கண்டோம்!

(மத்தேயு 8:1-17).

இந்திய விடுதலை நாள் 

வாழ்த்துகள்!

இந்திய விடுதலை நாள் 

வாழ்த்துகள்!

பஞ்சம் பசி பிணி, பாழாக்குகிற ,

பாரதம் என்று கிடக்காமல்,

கொஞ்சம் கூட குறைவில்லாமல்,

கொழிக்கும் நாடாய் எழுக.

வஞ்சம் வைத்து, பிறரையழிக்கும்,

வல்லமை தேடி நடக்காமல், 

நெஞ்சம் நிரப்பி, வாழ வைக்கும், 

நேரிய நாட்டைத் தொழுக!

-கெர்சோம் செல்லையா. 

என்னிலத்தோர்க்கும் இறைவன் ஒருவன்;

இவரது பண்புகள் எப்படியோ?

தன்னையேயறியா மானிடன் கேட்பின்,

தருகிற பதில்கள் செப்படியோ?

விண்ணிலிருந்து வந்தவர் மைந்தன்;

விளக்கும் காட்சி காணலையோ?

மண்ணின் மகனே, இயேசுவைப் பார்ப்பாய்;

மனித வடிவிறை தோணலையோ?

(மத்தேயு: 5-7)

முன்னர் வந்த இறை வாங்கினர்கள்,

மொழிந்த முறையைப் பாருங்கள்.

இன்னிலம் மீட்க, இறைமொழிந்தாரென,

எழுதிய வாக்கியம் சேருங்கள்.

தன்னைத் தாழ்த்தும் மைந்தன் வாக்கின்,

தன்மையை பகுத்துப் பாருங்கள்.

என்னிலத்தார்களும் இதுவரை அறியா,

இயேசுவின் ஆளுமை சேருங்கள்!

(மத்தேயு :5-7)